மகேந்திர வர்மப் பல்லவன் (600-630) இயற்றிய
மத்த விலாசப் பிரகசனம்(The farce of drunken sports)

(நாந்தி பாடியவுடன் சூத்திரதாரர் அரங்கத்திற்கு வருகிறார்.)

சூத்திரதாரர்:
பேச்சு, ஆடல், உடை, உருவம், குணம், மெய்ப்பாடு இவைகளைத் தன்னிடத்தே கொண்டுள்ள, திப்பிய னாகிய காபாலியின் தாண்டவம், மூவுலகத்திலும் போற்றப்படுகின்றது. இத்தாண்டவத்தைக் காண்ப வனும் அக்காபாலியே. அவனுடைய அளவுகடந்த அகண்ட அருளானது இந்த உலகமாகிய பாத்திரத்தில்*1 பரந்து நிறைவதாக.
புதிய நாடகத்தை நடிக்கும்படிச் சபையோர் எங்களை நியமித்திருக்கிறார்கள். இளையாள் மீது கோபங் கொண்டிருக்கிற என்னுடைய மூத்த மனைவியின் கோபத்தை தணிப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அவளிடம் போகிறேன்.

(அணியறையை நோக்கி)

ஆரியே! இங்கு வருக.

(கடிகை வருகிறாள்.)

நடிகை:

(சினத்துடன்)

ஐயா! பௌவன குணபர மத்த விலாசப் பிரஹசனத்தை*2 என்னிடம் விளையாட வந்து விட்டீரோ?


சூத்திர:
ஆமாம். அதுதான்.

நடிகை:
அப்படியானால், அதை தாங்கள் யாரிடம் ஆசை கொண்டு இருக்கிறீர்களோ அவளிடம், போய் விளையாடுங்கள்.

சூத்திர:
உன்னோடு ஆடும்படித்தான் எனக்குக்கட்டளை.

நடிகை:
அப்படி அவள் உமக்குக் கட்டளையிட்டாளோ?

சூத்திர:
ஆமாம். இந்த ஆட்டத்தில் நீ நடித்தால் சபையோரின் நன்மதிப்பைப் பெறுவாய்.

நடிகை:
நன்மதிப்பைப் பெறத் தகுந்தவர் தாங்கள் தான்.

சூத்திர:
அது எனக்குத் தகுந்தது தான். எப்படி என்றால் சபையோர் உன்னுடைய நடிப்பைக் கண்டு மகிழ்ந்து அந்த நன்மதிப்பை எனக்கு அளிப்பார்கள்.

நடிகை:

(மகிழ்ச்சியுடன்)

அப்படியானால், சபையோரின் அபிமானத்தைப் பெற்றிருக்கிறேன்!


சூத்திர:

ஆம். மெய்யாகவே.

நடிகை:

இந்த நல்ல செய்தியைச் சொன்ன தங்களுக்கு என்ன வெகுமதி தருவேன்!


சூத்திர:

வெகுமதியைப் பற்றிப் பேசி வீணாகக் காலங்கழிக்க வேண்டாம். இதோ உன்னுடைய இனிய முகத்தைக் காண்கிறேன். மகிழ்ச்சியைக் காட்டுகிற
உன்னுடைய கண்களையும், புன்முறுவல் அரும்பும் உன்னுடைய வாயிதழ்களையும் காண்கிறேன். இதைவிட வேறு வெகுமதி எனக்கு என்ன வேண்டும்?

நடிகை:
இப்போது என்ன ஆட்டம் ஆடப் போகிறீர், ஐயா!
சூத்திர: ஏன். நீதான் முன்னமே சொன்னாயே; மத்த விலாசப் பிரஹசனம் என்று.


நடிகை:

நான் கோபமாகப் பேசியது உண்மையாய் விட்டது! இந் நாடகத்தை இயற்றிய ஆசிரியர் யாரோ?


சூத்திர:

சொல்லுகிறேன் கேள். பல்லவ குலமாகிய உலகத் திற்கு மேருமலை போன்றவரும், எல்லா நாட்டரசர் களையும் வென்று புகழ் கொண்டவரும், ஆகண்ட லனை (இந்திரன்)ப் போன்ற ஆற்றலையுடையவரும். நமது செல்வப் பெருமைக்கேற்ப கொடைப் பெருமையினால் மகாராஜனையும் (குபேரன்) சிறியவனாகச் செய்தவரும் ஆகிய ஸ்ரீ நரசிம்ம விஷ்ணு வர்மருடைய திருக்குமாரர் ஆவர் இந்நூலாசிரியர். இவ்வாசிரியர் குணங்களைக்
கூறுகிறேன் கேள். ஆறு பகையை வென்றவர்; பிறருக்கு நன்மை செய்கிற அருள் குணத்தினால் ஐம்பெரும் பூதங்களுக்குச் சமானம் ஆனவர். இவருடைய பெயர் ஸ்ரீமகேந்திர விக்கிரவர்மர் என்பது.
அன்றியும், கற்பாந்த காலத்தின் இறுதியில் உலகம் முதலிய எல்லாப் பொருள்களும் ஆதி புருஷனிடம் ஒடுங்குவது போல, அறிவு, ஈகை, அருள், உயர்வு, ஒளி, கலைவன்மை, வினயம் முதலிய நற்குணங்கள் எல்லாம், இக்கலிகாலத்திலே புகலிடம் கிடைக்காமல் அலைந்து தேடி, கடைசியாக இவரே தமக்குரிய புகலிடம் எனக் கண்டு, இவரிடம் குடிபுகுந்தன.
மேலும் உயர்தரமாகிய நகைச்சுவையை உண்டாக்கும் சொற்களாகிய உயர்ந்த இரத்தினங்களும். சிறந்த கவிதைகளும் இவரிடத்திலிருந்து உண்டாகின்றன.


நடிகை:

இந்தப் புதிய நாடகத்தை உடனே நடிக்க வேண்டும். இனியும் தாமதம் ஏன்?


சூத்திர:
இசைப் பாட்டுக்கள் தான் என்னுடைய செல்வமும் வாழ்வும். ஆனால், இப்போது இக்கவிஞரின் குணங்களை நினைக்கும் போது என் மனம் அடங்குகிறது.

(அணியறையிலிருந்து ஒரு குரல்.)

அன்பே, தேவ சோமா!
சூத்திர:

கபால பாத்திரத்தைத் தனது பெரும் புகழாக உடைய அந்தக் காபாலிகன், குடித்து வெறித்துக் களியாட்டம் தெளிந்து அதோ, குமரி ஒருத்தியுடன் வருகிறான். (போகிறார்கள்)

    சத்தியசோமன்-சைவ சமயத்தைச் சேர்ந்த ஒரு காபாலிகன்.
    தேவசோமை-சத்திய சோமனுடைய மனைவி
    நாகசேனன்-ஒரு பௌத்த பிக்கு
    பப்ருகல்பன்-சைவ சமயத்தைச் சேர்ந்த ஒரு பாசுபதன்
    பயித்தியக்காரன்


இடம்: காஞ்சிமா நகரம்.

(காபாலிகன் சத்திய சோமன், தன் மனைவி தேவ சோமையுடன் குடித்து மயங்கி வருகிறான்.)

காபாலி:
கண்ணே தேவசோமா! தபசு செய்வதால் நினைத்த உருவத்தை அமைத்துக் கொள்ளலாம் என்பது உண்மை தான். நீ கொண்டுள்ள பரமவிரதத்தின்*3 பலனாக உன் உருவத்தையே மாற்றிக் கொண்டு கட்டழகியாய்க் காணப்படுகிறாய்!
முகத்தில் சிறு வியர்வைத் துளிகள் அரும்ப, புருவங்கள் வில்லைப்போல் வளைந்து நெகிழ, காரணமின்றிச் சிரிப்பதும், வார்த்தைகள் குழறுவதும், கண்கள் சிவந்திருப்பதும், கருவிழிகள் சுழல்வதும், கூந்தல் அவிழ்ந்திருப்பதும், கழுத்திலுள்ள மாலைகள் நெகிழ்வதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றன.


தேவசோமை:

நான் குடித்திருக்கிறதாகவா­ சொல்லுகிறீர்?

காபாலி:
அன்பே, என்ன சொன்னாய்?


தேவ:

நான் ஒன்றும் சொல்லவில்லையே!


காபாலி:

அப்படியானால், நான் குடித்திருக்கிறேனா?


தேவ:

ஐயா, தரை சுற்றுகிறது; பூமி சுழல்கிறது. நான் விழுந்து விடுவேன் போல் இருக்கிறது. என்னைப் பிடித்துக் கொள்ளும்.

காபாலி:

இதோ பிடித்துக் கொள்கிறேன். அன்பே!

(அவளைப் பிடிக்கப்போய் குடி மயக்கத்தினால் கீழே விழுகி றான்)

*4 சோமதேவீ! என் கண்ணே! என்மேல் உனக்குக் கோபமா? உன்னைப் பிடிக்க வரும்போது ஏன் விலகிப் போகிறாய்.


தேவ:

ஆமாம். சோமாதேவிக்கு உன்மேல் கோபந்தான். அவள் முன்பு தலைவணங்கி சாந்தப்படுத்த முயன்றாலும் அவள் உன்னை விட்டு விலகிப் போகிறாள்!

காபாலி:
மெய்தான். நீ சோமாதேவிதான்.

(யோசித்து)

இல்லை, இல்லை நீ தேவசோமை.

தேவ:
சோமதேவிமேல் உமக்கு ஆசை அதிகம், ஐயா, அதனால்தான் என்னிடம் பேசும்போதும் அவள் பெயரைச் சொல்லி அழைக்கிறீர்.


காபாலி:

என்னுடைய குடிமயக்கத்தினால், கண்ணே! வார்த்தை தவறி வந்து விட்டது, கோபப்படாதே.

தேவ:
நல்லவேளை. நீர் அறிந்து, வேண்டுமென்றே சொல்லவில்லை.

காபாலி:
குடிப்பழக்கம், என்னையறியாமல் ஏதேதோ உளறும் படிச் செய்கிறது! நல்லது. இன்று முதல் குடிப்பதை விட்டு விடுகிறேன்.

தேவ:
ஐயாவே! என்பொருட்டு உம்முடைய பரம விரதத்தைத் தவறவிடவேண்டாம்.

(அவன் காலில் விழுந்து வேண்டுகிறாள்.)காபாலி:

(மகிழ்ச்சிபொங்க அவளைத் தூக்கி நிறுத்தித் தழுவிக் கொள்கிறான்)

த்ருண, த்ருண! நமசிவாய! அன்பே, விசித்திரமான காபாலிக வேடம் பூண்டு, மனதாற மதுவை அருந்தி, கருவிழி மங்கையர் முகத்தைக் கண்டுகொண்டிருந்தால் அதுவே மோக்ஷத்திற்குச் செல்லும் நல்வழியாகும் என்று திருவாய் மலர்ந்தருளிய சூலம் ஏந்திய எம்பெருமான் நீடூழி வாழ்க!


தேவ:
நீர் இப்படி எல்லாம் பேசக்கூடாது. ஆருகதர் (ஜைனர்) மோக்ஷத்திற்கு வேறுவழி காட்டுகிறார்கள்.

காபாலி:
ஆமாம், அன்பே! அவர்கள் யார் தெரியுமா? காரணத்தைப் பொறுத்தது காரியம் என்று கூறுகிறவர்கள். இன்பம், துன்பத்தின் காரியம் என்று கூறுகிறவர்கள். ஆகையால் அவர்கள் நிந்திக்கத் தக்கவர்கள்.

தேவ: பாபம் சாந்தியாகட்டும்!


காபாலி:

சாந்தி! சாந்தி! ஐம்புலன்களை அடக்கி, பிரமசரிய விரதங் காத்து, தலைமயிரைப் பிடுங்கி எடுத்து, அழுக்கடைந்த உடம்பில் அழுக்குக் கந்தைகளை உடுத்து, உண்பதற்குத் தனியாக ஒரு நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு உயிரை வாட்டித் துன்புறுத்துகிற அவர்கள் பெயரை நிந்தனையாகச் சொல்லுவதும் மகாபாபம். அப்பாஷண்டிகளின் பெயரைக் கூறிய என்னுடைய நாக்கு குற்றப்பட்டுவிட்டது. ஆகையால், கள்ளினால் கழுவிச் சுத்தப்படுத்தவேண்டும்.


தேவ:

அப்படியானால், இன்னொரு கள்ளுக்கடைக்குப் போகலாம்; வாரும்.


காபாலி:

அப்படியே செய்வோம். வா, போகலாம்.

(போகிறார் கள்)

ஆகா! காஞ்சிமா நகரத்தின் அழகே அழகு. கோயில் கோபுரங்களின் மேல் படிந்துள்ள மேகங் களினால் உண்டாகும் இடிமுழக்கம், முரசுகள் ஒலிக்கிற முழக்கத்தோடு மாறுபட்டொலிக்கிறது! மாலைகளும் பூச் செண்டுகளும் நிறைந்த பூக் கடைகள் இளவேனிற் காலத்தைக் காட்டுவது போல் இருக்கின்றன! மங்கையரின் சிலம்பொலி காம தேவனுடைய வெற்றி முழக்கத்தின் ஆரவாரம் போல் இருக்கிறது!


தேவ:
ஐயா! காஞ்சிமாநகரம் வாருணி5தேவியைப் போல இனிமையாகக் காணப்படுகிறது!


காபாலி:

ஆமாம்! ஆமாம்! அதோ, அந்தக் கள்ளுக்கடையைப் பார்! அது யாகசாலையைப்போன்று எவ்வளவு அழகாகக் காணப்படுகிறது! கடையின் பெயரைத் தாங்கி நிற்கும் கம்பம், யாகசாலையில் உள்ள யூபஸ்தம்பம் போல் காணப்படுகிறது. மதுபானம் சோமபானம் போலக் காணப்படுகிறது. கள்குடிப்போர், யாகசாலையில் உள்ள பிராமணர் போலக் காணப் படுகிறார்கள். கள் கலயங்கள், சோமபானத்தை வைக்கும் பாத்திரங்கள் போல் இருக்கின்றன. அங்கு விற்கப்படும் சுவையுள்ள மச்சமாமிசங்கள், யாகத்தில் இடப்படும் ஆகுதிகள் போலக் காணப்படுகின்றன. குடிகாரர்களின் வெறிப்பேச்சு, யஜுர் வேதத்தின் யஜுஸைப் போல் இருக்கிறது. அவர்கள் பாடும் பாட்டுகள் சாம கானத்தை ஒத்திருக்கின்றன. கள்ளை முகந்து எடுக்கும் அகப்பை, யாகத்தீயில் நெய் சொரியும் கரண்டி (தர்வி) போல இருக்கிறது. குடிவேட்கையே யாகாக்கினி போலும், கள்ளுக் கடைக்காரன், யாகத்தை நடத்தும் யஜமானன் போலக் காணப்படுகிறான்.

தேவ:
ஆமாம்! அங்குச் சென்று நாம் இலவசமாகப் பெறுகிற மதுபானம், யாகத்தில் உருத்திரனுக்கு அளிக்கும் ஆகுதியை ஒத்திருக்கிறது!


காபாலி:

ஓகோ! குடிகாரர் ஆடும் கூத்து எவ்வளவு அழகு! கொட்டு முழக்கத்திற்கு ஒத்தாற் போல ஆடியும் அபிநயித்தும் பேசியும் முகஜாடை காட்டியும் ஆடுவது, எவ்வளவு நேர்த்தி! மேலாடையை ஒரு கையினால் உயரத்தூக்கிப் பிடித்து, அவிழ்ந்து விழுகிற அறையாடையை மற்றொருகையில் பிடிக்கும் போது, தாளம் தவறி விடுகிறது. கழுத்தில் அணிந்துள்ள மாலைகள் கசங்கிவிட்டன.


தேவ:
ஐயா, நீர் ஒரு நல்ல ரசிகர்!


காபாலி:

கிண்ணங்களில் பெய்யப்படும் வாருணிதேவி*6 மங்கை யொருத்தி தன் ஆடை அணிகளைக் கழற்றி வைத்து விட்டதை ஒக்கும்; ஊடல் தீர்ந்த தலைவன் தலைவியரை ஒக்கும்; வாலிப வயதின் வளமையை ஒக்கும்; வாழ்க்கையின் விளையாட்டையொக்கும்.
அன்பே, தேவசோமா! முன்னொரு காலத்திலே, சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணினால் காமன் உடலை எரித்துச் சாம்பலாக்கினார் என்று கூறுவது பொய்க்கதையே. அந்தக் காமனுடைய உடம்பு, அனலினால் வெண்ணெய் போல் உருகி நமது உள்ளத்தில் பாய்ந்து காமமாக வெளிப்படுகிறது.

தேவ:

ஆமாம் ஐயா. நீர் சொல்லுவது முழுவதும் சரியே. உலகத்துக்கு நல்லதையே செய்கிற சிவபெருமான், உலகத்தை ஒரு போதும் அழிக்க மாட்டார்.

(ஒருவரை யொருவர் கன்னத்தில் தட்டிக் கொள்கிறார்கள்.)

காபாலி:
அம்மணீ! பிக்ஷாந்தேஹி!

உள்ளிருந்து
ஒரு குரல்:
இதோ இதை வாங்கிக் கொள், ஐயா.காபாலி:

இதோ பெற்றுக் கொள்கிறேன். தேவசோமா! என்னுடைய கபால பாத்திரம் எங்கே?

தேவ:

அதைக் காணவில்லையே!

காபாலி:

(யோசித்து)

அந்தக் கள்ளுக்கடையில் அதை மறந்து வைத்துவிட்டோம் போலிருக்கிறது. நல்லது. அங்கே போய்ப் பார்ப்போம்.


தேவ:
அன்போடு அளிக்கும் பிச்சையை வாங்கா மலிருப்பது முறையல்லவே. இப்போது என்ன செய்வது?


காபாலி:

ஆபத்தர்மப்படி செய். இந்த மாட்டுக் கொம்பில் வாங்கிக் கொள்.


தேவ:

அப்படியே செய்கிறேன்.

(பிச்சையை மாட்டுக் கொம்பில் பெற்றுக் கொள்கிறாள். பிறகு, இருவரும் சென்று கபால பாத்திரத்தைச் தேடுகிறார்கள்.)

காபாலி:
இங்கேயும் அதைக் காணோமே. எங்கு போய் விட்டது!

(ஆத்திரத்துடன்)

ஓ! மகேஸ்வரர்களே, மகேஸ்வரர்களே! என்னுடைய கபால பாத்திரத்தைக் கண்டீர்களா? மகேஸ்வரர்கள் என்ன சொல்லு கிறார்கள்? இல்லை. நாங்கள் பார்க்கவில்லை என்றா சொல்லுகிறார்கள்? அந்தோ! நான் கெட்டேன். என்னுடைய தூய்மையான காபாலிக விரதம் அழிந்து விட்டது. கபாலபாத்திரம் இல்லாமல், நான் எப்படி காபாலிகன் ஆவேன்? நான் உண்ணவும் குடிக்கவும் அந்த தூய கபாலபாத்திரம் எவ்வளவு உதவியாக இருந்தது! அப்பாத்திரம் போய்விட்டபடியால், ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டதுபோல், என்னுடைய மனம் கலங்குகிறது.

(தரையில் விழுந்து தலையில் அடித்துக் கொள்கிறான்.)

ஆ! தெரிந்தது, தெரிந்தது! கபால பாத்திரம், காபாலிக விரதத்துக்கு ‘லக்ஷணா மாத்திரம்*8’ தான். கபால பாத்திரத்தை இழந்து விட்டபடியினாலேயே என் கபாலிக விரதத்தை நான் இழந்து விடவில்லை.

(எழுந்திருக்கிறான்.)தேவ:

அந்தக் கபால பாத்திரத்தை யார் எடுத்திருப்பார்கள், ஐயா!


காபாலி:

அதில், வறுத்த இறைச்சியை வைத்திருந்தபடியால், அதை ஒரு நாயாவது எடுத்திருக்க வேண்டும்; அல்லது, ஒரு பௌத்த பிக்ஷுவாவது எடுத்திருக்க வேண்டும்.


தேவ:

அப்படியானால், இந்த காஞ்சிமா நகரம் முழுவதும் சுற்றிப் பார்த்து அதைக் கண்டு பிடிப்போம்.

(இருவரும் நடந்து செல்கிறார்கள். ஒரு பௌத்த பிக்ஷு, தன் கையில் ஒரு மண்டையை*9 ஏந்தி, அதைத் தனது மேலாடையில் மறைத்துக் கொண்டு வருகிறான்.)பௌ. பிக்கு:

ஆகா! நம்முடைய உபாசக அன்பன் தனதாச செட்டியின் தர்மம், மற்ற எல்லாருடைய தர்மங்களை விட மேம்பட்டது. அவன் எனக்குக் கொடுத்த இந்த உணவு, பலவித மச்சமாமிசக் கறி வகைகளுடன் மணமும் சுவையும் உள்ளது. இப்போது இராசவி காரைக்குப்10 போகவேண்டும்.

(நடந்து கொண்டே தனக்குள்)

ஆ! பகவான் ததாகதருடைய

(புத்தருடைய)

கருணையே கருணை. என்னைப் போன்ற, பௌத்த சங்கத்தைச் சேர்ந்த பிக்குகள் வசிக்க நல்ல விகாரை களையும் படுத்துத் தூங்க நல்ல படுக்கைகளையும் அனுமதித்து இருப்பதோடு, முற்பகலில் வயிறாரச் சாப்பிடவும் பிற்பகலில் சுவையும் மணமும் உள்ள பானங்களைப் பருகவும், ஐந்து வகை நறுமணமுள்ள தாம்பூலங்களைத் தரிக்கவும், மெல்லிய ஆடைகளை யுடுக்கவும் அவர் அனுமதித்துள்ளார். ஆனால், பெண் மகளிரையும் மதுபானங்களையும், கூடாது என்று அவர் ஏன் விலக்கி வைத்தார்? எல்லாம் அறிந்த பகவான் இவை இரண்டையும் தள்ளிவைத்திருப் பாரா? என்போன்ற வாலிப பிக்குகளிடத்தில் பொறாமையும் வெறுப்புங் கொண்ட அந்தக் கிழ பிக்குகள், பெண்ணையும் கள்ளையும் உபயோகிக் கலாம் என்று பகவான் எழுதி வைத்ததை, மறைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். மாற்றி எழுதப் படாத, திரிபிடகத்தின் மூல நூல் எங்கே கிடைக்கும்! அப்படிப்பட்ட நூல் ஒன்று கிடைக்குமானால், புத்தருடைய முழு போதனையையும் உலகத்துக்கு வெளிப்படுத்தி பௌத்த சங்கத்துக்கு நன்மையுண் டாக்குவேன்.

(நடந்து செல்கிறான்)தேவ:

அதோபார் ஐயா! சிவந்த ஆடை போர்த்துக் கொண்டு, உடம்பை அடக்கி ஒடுக்கி, நல்லவர்கள் நிறைந்த இந்த தெருவிலே, வலப்பக்கமும் இடப்பக்கமும் பார்த்துக் கொண்டு பயந்தவன்போல அந்த ஆள் வேகமாக நடக்கிறான்.


காபாலி:

ஆமாம்! ஆமாம்! அவன் கையில் எதையோ மேலாடையினால் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறான்.


தேவ:

அப்படியானால் அவனைப்பிடித்து நிறுத்தி, என்ன வைத்திருக்கிறான் என்பதைப் பார்த்து விடுவோம்.


காபாலி:

அப்படித்தான் செய்வோம்.

(வேகமாக நடந்து போய்)

ஓய்! பௌத்த சந்நியாசி, நில் அங்கே.


பௌத்த பிக்கு:

யார் என்னை இவ்வாறு அழைப்பது

(நின்று திரும்பிப் பார்த்து)

ஓ! ஏகம்பத்தில்*11 வசிக்கிற அந்தப் போக்கிரிக் காபாலிகன்! நல்லது, நான் இந்தக் குடிகாரப்பயலின் கேலிக்கூத்துக்கு ஆளாகக் கூடாது.

(வேகமாக நடக்கிறான்.)காபாலி:

பார்த்தாயா, தேவசோமா! என்னுடைய கபால பாத்திரம் அகப்பட்டுவிட்டது. என்னைக் கண்டவுடன் அந்தப் பயல் அச்சங்கொண்டு வேகமாக நடந்து தப்பித்துக் கொள்ளப் பார்ப்பதிலிருந்து பாத்திரத்தைத் திருடி னவன் அவன் தான் என்பது உறுதியாகிறது.

(ஓடிச் சென்ற பிக்குவை வழி மறிக்கிறான்.)

திருட்டுப் பயலே! எங்கே போவாய்?


பௌ. பிக்கு:

இல்லை. காபாலிக சகோதர! இப்படி எல்லாம் பேசுவது சரியல்ல.

(தனக்குள்)

எவ்வளவு அழகுள்ள நங்கை இவள்!

காபாலி:

ஓய்! பிக்ஷு. உன் கையில் இருப்பதைக் காட்டு. உன் சீவாப் போர்வையில் பொதிந்து வைத்திருப்பதை நான் பார்க்க வேண்டும்.


பௌ. பிக்கு:

பார்க்க அதில் என்ன இருக்கிறது? அது ஒரு மண்டை. என்னுடைய பிக்ஷைப் பாத்திரம்.


காபாலி:

அதைத்தான் நான் பார்க்கவேண்டுமென்கிற­ேன்.


பௌ. பிக்கு:

இல்லை. சகோதரா! அப்படிச் சொல்லாதே அதை நாங்கள் மூடி மறைத்துக் கொண்டு போக வேண்டும். உனக்கும் இது தெரிந்ததுதானே.


காபாலி:

ஆம் பொருள்களை இப்படி மறைத்துக் கொண்டு போவதற்காகத்தான் புத்தர், நீண்ட சீவரம் தரித்துக் கொள்ளச் சொன்னார்.


பௌ. பிக்கு:

ஆமாம். உண்மை தான். நீர் சொல்லுவது சத்தியம்.


காபாலி:

அது சம்விரதிசத்தியம்*12 நான்பரமார்த்த சத்தியத்தை*12 அறிய வேண்டும்.


பௌ. பிக்கு:

நன்று, நன்று. உன்னுடைய கேலிப் பேச்சு போதும். பிக்ஷைநேரம் கடந்து விடுகிறது. நான் போக வேண்டும்.

(அப்பால் நடக்கிறான்)காபாலி:

கள்ளப்பயலே. எங்கே போகிறாய்? என் மண்டைப் பாத்திரத்தைக் கொடுத்து விட்டுப போ.

(பிக்கு போர்த்துள்ள சீவா ஆடையின் முன்தானையைப் பிடித்துக் கொள்கிறான் காபாலிகன்.)


பௌ. பிக்கு:
புத்தருக்கு வணக்கம்.


காபாலி:

கரவடனுக்கு வணக்கம் என்று சொல்லு. களவு நூலை எழுதினவன் அவன். புத்தர் கரவடனுக்கும் மேலா னவர். பிராமணர் தூங்கும்போது, மகாபாரதத்தி லிருந்தும் வேதாந்தத்திலிருந்தும் திருடி நூல் எழுதவில்லையா உமது புத்தர் *13?


பௌ. பிக்கு:

பாவம் சாந்தி. பாவம் சாந்தி.


காபாலி:

இவ்வளவு கைதேர்ந்த பிக்குவின் பாவம் சாந்தியாகாமல் இருக்குமா


தேவ:

ஐயா, நீர் களைப்படைந்திருக்கிறீ­ர். அந்தக் கபால பாத்திரம் நல்லபடியாகக் கிடைக்கப் போகிறதில்லை. ஆகையால், இந்த மாட்டுக்கொம்பில் இருக்கிற கள்ளைக் குடித்து, களைப்பு தீர்ந்தபிறகு, அவருடன் வாதம் செய்யுங்கள்.


காபாலி:
சரி. அப்படியே ஆகட்டும்.

(தேவசோமை மாட்டுக் கொம்பிலுள்ள மதுவைக் கொடுக்கிறான். காபாலிகன் வாங்கிக் குடித்துவிட்டு)

நீயும் கொஞ்சம் குடி. நீயும் களைப்படைந்திருக்கிறாய்.

(அவளிடம் கொடுக்கிறான்.)


தேவ:
அப்படியே.

(அவளும் குடிக்கிறாள்.)காபாலி:

இவர் நமக்குத் தீங்கு செய்தவர் தான். ஆனாலும், சமய நூல், எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கும்படி கட்டளையிடுகிறது. ஆகையால் இந்தச் சந்நியாசிக்கும் அதில் கொஞ்சம் கொடு.


தேவ:

அப்படியே. ஐயா! இதை வாங்கிக் கொள்ளுங்கள்

பௌ. பிக்கு:

(தனக்குள்)

நம்முடைய அதிர்ஷ்டம் நல்ல மதுபானம் கிடைக்கிறது! ஆனால் யாரேனும் பார்த்து விட்டால் என்ன செய்வது?

(அவளிடம்)

அம்மணி! அப்படிச் சொல்லாதே. எங்களுக்கு அது தகுந்ததல்ல.

(நாக்கைச் சப்பிக் கொள்கிறான்.)


தேவ:
போமையா, போம். உமக்கு இவ்வளவு நல்ல, அதிர்ஷ்டம் எப்போ கிடைக்கப்போகிறது.


காபாலி:

தேவசோமா! அவருக்கு மனத்தில் ஆசை பொங்கி வாய் ஊறுகிறது. ஆகையால், பேச்சு குழறுகிறது.


பௌ.பிக்கு:

உங்களுக்கு இன்னும் என்மேல் இரக்கம் உண்டாகவில்லையா!


காபாலி:

எனக்கு இரக்கம் இருந்தால் எப்படி வீதராகனாக*14 இருக்க முடியும்?


பௌ. பிக்கு:

வீதராகராக இருப்பவர் கோபம் இல்லாதவராகவும் இருக்க வேண்டுமே.


காபாலி:

என்னுடைய பொருளைக் கொடுத்துவிட்டால், கோபம் இல்லாதவனாக இருப்பேன்.


பௌ. பிக்கு:

உன்னுடைய “பொருள்” என்பதன் பொருள் என்ன?


காபாலி:
கபால பாத்திரந்தான்.

பௌ. பிக்கு:
என்ன! கபாலபாத்திரமா?


காபாலி:
“கபால பாத்திரமா” என்று கேட்கிறார் இவர்! இது இவருக்கு இயற்கைதானே. கண்ணுக்குப் புலப்படும் உண்மைப்பொருள்களை மண், விண், கடல், மலை முதலியவற்றை எல்லாம் மாயை என்றும் மித்தை15 என்றும் கூறியவரின் வழிவந்த மகன் அல்லவா இவர்? ஆகையால், சிறு மண்டையோட்டையும் “இல்லை” என்று சொல்லி மறைக்கமாட்டாரா?


தேவ:
இப்படி எல்லாம் நயமாகப்பேசி நல்லவிதமாகக் கேட்டால் கொடுக்கமாட்டார். அவர் கையில் இருக்கிற கபாலபாத்திரத்தைப் பிடுங்கிக்கொண்டு வாருங்கள்.


காபாலி:

ஆமாம்; அதுதான் சரி. அப்படியே செய்கிறேன்.

(பிடுங்கப் பார்க்கிறான்)பௌ. பிக்கு:

எட்டிநில். காபாலிகத் திருட்டுப்பயலே.

(கையால் விலக்கித் தள்ளி காலினால் உதைக்கிறான்)

காபாலி:
விழுந்துவிட்டேனே


தேவ:

தேவடியாள் மகனே! உன்னை உயிரோடு விடுகிறேனா பார்!

(ஓடிப்போய் பிக்குவின் தலையைப் பிடிக்கிறாள். பிக்குவுக்கு மொட்டைத் தலையாகையால் அவனைப் பிடிக்கமுடியாமல் அவளும் கீழே விழுகிறாள்).

பௌ. பிக்கு:

(தனக்குள்)

பிக்குகள் தலைமயிரை மழித்துவிட வேண்டும் என்று கட்டளையிட்ட புத்தபகவான் திரிகாலஞானி.

(உரக்க)

எழுந்திரு அம்மணி, எழுந்திரு.

(தேவசோமையைக் கைகொடுத்துத் தூக்கி விடுகிறான்).காபாலி:

பாருங்கள் மகேசுவரர்களே! பாருங்கள். சந்நியாசி என்று சொல்லிக்கொள்ளும் இந்த நாகசேனன்–போக்கிரிப்பயல், என் மனைவியின் கையைப் பிடித்து பாணிக்கிரகணம்*16 செய்கிறான்.


பௌ. பிக்கு:

இல்லை. சகோதரா! அப்படிச் சொல்லாதே. துன்பத்தில் விழுந்தவர்களைக் கைதூக்கிவிட வேண்டும் என்பது எங்கள் மதக்கட்டளையாகும்.


காபாலி:

இதுவும் உங்கள் சர்வஜ்ஞன்

(புத்தன்)

கட்டளையா? முதலில் விழுந்தவன் நான் அல்லவா? நல்லது. இருக்கட்டும். இப்போ, உன்னுடைய மண்டை ஓடு என் கை கபாலபாத்திரமாகப் போகிறது.

(எழுந்து சென்று பிக்குவைத் தாக்குகிறான்)

பௌ. பிக்கு: ஓகோ! துக்கம். அநித்தியம்.*17


காபாலி:

பாருங்கள், மகேசுவரர்களே! பாருங்கள்! சந்நியாசி வேடம் பூண்ட இந்தப் போக்கிரிப்பயல் என்னுடைய
திருடிக்கொண்டதும் அல்லாமல் கூப்பாடுபோட்டு ஓலமிடுகிறான். நல்லது, நானும் ஓலமிடுகிறேன். ஐயகோ! பிராமணர்களுக்கு ஆபத்து, பிராமணர்களுக்கு ஆபத்து.

(இக் கூப்பாட்டைக் கேட்டு ஒரு பாசுபதன் வருகிறான்.)

பாசுபதன்:
ஓய்! சத்தியசோமரே! எதற்காகக் கூப்பாடு போடுகிறீர்?


காபாலி:

ஓ! பப்ருகல்பரே! பாரும். துறவி என்று சொல்லிக் கொள்ளும் இந்தப் போக்கிரிப்பயல், நாகசேனன், என்னுடைய கபாலபாத்திரத்தைத் திருடிக் கொண்டு கொடுக்க மாட்டேன் என்கிறான்.


பாசுபதன்:

(தனக்குள்)

நல்ல அழகி! புல்லைக்காட்டிப் பசுவைக் கொண்டுபோவதுபோல, இந்தச் சந்நியாசி–அம்பட்டத்தாசி மகன்–தன் இடுப்பில் செருகியுள்ள காசைக்காட்டி இவளை அடித்துக்கொண்டுபோகப் பார்க்கிறான். இருக்கட்டும். இவனுக்குச் சார்பாகப் பேசி, காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டுபோன கதைப்படி செய்கிறேன்.

(உரக்க)

நல்லது நாகசேனரே! இவர் சொல்லுவது உண்மை தானா?


பௌ. பிக்கு:
ஐயா, தாங்கள் அதை நம்புகிறீரா? பிறர் பொருளை, அதற்குரியவர் கொடுத்தாலன்றி, எடுக்கக் கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. பொய்பேசக் கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. காம விழைவு கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. உயிரைக் கொல்லக் கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. குறித்த காலந்தவறி உணவு கொள்ளக் கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. தர்மம் சரணங் கச்சாமீ*18


பாசுபதன்:

என்ன, சத்தியசோமரே! இது அவர்கள் சமயக் கட்டளை. இதற்கு நீர் என்ன சொல்லுகிறீர்?


காபாலி:
பொய்பேசக் கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை.
என்று எப்படி அறிவது??


காபாலி:

பிரத்தியக்ஷப் பிரமாணம் இருக்கும்போது காரண காரியங்களைப் பற்றிப்பேசுவது பயனற்றது.


பாசு:
பிரத்தியக்ஷப் பிரமாணம் என்று நீர் சொல்லுவதன் கருத்து என்ன?


தேவ:

ஐயா! கபால பாத்திரத்தை அவர் போர்வையில் மறைத்து வைத்திருக்கிறார்.


பாசு:
அப்படித்தானா, ஐயா!


பௌ. பிக்கு:

இந்த மண்டை மற்றவருடையதன்று.


காபாலி:

அப்படியானால், அதைக்காட்டு.


பௌ. பிக்கு:

காட்டுகிறேன்.

(காட்டுகிறான்)பாசு:

பாருங்கள், மகேசுவரர்களே! பாருங்கள். இந்தப் பௌத்த பிக்குவின்மேல் இந்தக் கபாலியின் அநியாயமாக அவதூறு சுமத்துவதைப் பாருங்கள்.


பௌ. பிக்கு:

பிறர்பொருளை, அதற்குரியவர் கொடுத்தாலன்றி அதை எடுக்கக்கூடாது என்பது எங்கள் மதக் கட்டளை. பொய் பேசக்கூடாது என்பது எங்கள் மதக் கட்டளை. காமவிழைவு கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. உயிரைக்கொல்லக்கூடாது­ என்பது எங்கள் சமயக்கட்டளை. குறித்தகாலம் தவறி உணவு கொள்ளக்கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. தம்மம் சரணங் கச்சாமீ.

(பிக்கு கூத்தாடுகிறான். காபாலிகனும் அவனுடன் கூத்தாடுகிறான்.)

பௌ. பிக்கு:
சீச்சீ! வெட்கத்தால் தலை குனிய வேண்டிய இவன் கூத்தாடுகிறான்.


காபாலி:
போம், ஐயா, போம்! யார் கூத்தாடுகிறது?

(நாற்புறமும் பார்த்து)

காணாமற்போன என் கபால பாத்திரத்தை மீண்டும் கண்டபோது உண்டான சந்தோஷத்தினால், என்மனம் குதூகலமடைந்து கூத்தாடுகிறது.


பௌ. பிக்கு:

நன்றாகக் கண்ணைத் திறந்து இந்தப்பாத்திரத்தைப் பாரும், ஐயா! இதன் நிறத்தையும் பார்.


காபாலி:

இதற்கென்ன சொல்லுவது! இந்தப்பாத்திரம் காக்கையைப் போலக் கறுப்பாயிருக்கிறதே.


பௌ. பிக்கு:

அசையால், இந்த மண்டை என்னுடையது தான் என்பதை ஒப்புக் கொண்டீர் அல்லவா?


காபாலி:

ஆம். நீர் நிறத்தை மாற்றுவதில் கைதேர்ந்தவர் என்பதை ஒப்புக் கொண்டேன். இதோ பார். இதோ நீர் போர்த்திருக்கும் சீவா ஆடை, முதலில் தாமரை நூலைப் போல் வெண்மையாக இருந்தது. அதைக் காவி தோய்த்துக் காலைவானத்தின் செந்நிறம் போலச் செய்துவிட்டீர் அல்லவா? அன்றியும், கழுவிப் போக்க முடியாது காஷாயத்தினால்

(காவியினால்)

அகத்தையும் புறத்தையும் மூடிவைத்திருக்கும் உம்மைச் சேர்ந்த என்னுடைய வெண்மையான கபால பாத்திரம் எவ்வாறு காஷாய நிறத்தை அடையாமல் இருக்கும்?*19


தேவ:

ஐயையோ! அநியாயமே! எல்லா லக்ஷணங்களும் பொருந்திய எங்கள் கபால பாத்திரம், பிரம்ம கபாலம் போல திவ்வியமாகவும் வெண்ணிலா போலப் பிரகாசமாகவும், எப்போதும் கள்ளின் மணம் வீசிக் கொண்டும் இருக்குமே. இப்போ, இவனுடைய அழுக்குத் துணியில் படிந்து இந்த மாதிரி, நிறம் மாறிக் கெட்டுப் போய்விட்டதே. இதற்கு நான் என்ன செய்வேன்!

(அழுகிறாள்)காபாலி:

தேவசோமா! வருத்தப்படாதே, அதை மறுபடியும் சுத்தம் செய்து விடலாம். பெரியோர்கள் குற்றங் களுக்குக் கழுவாய் சொல்லியிருக்கிறார்கள். எப்படி என்றால், பிரம்மாவின் தலையைக் கிள்ளிய குற்றத் தைப் பிறையணிந்த எம்பெருமான்

(சிவன்)

கழுவாய் செய்துகொண்டார். துவஷ்டாவின் மகனான விருத்தி ராசுரனைக் கொன்ற பாவத்தை இந்திரனும் கழுவாய் செய்துகொண்டார். பப்ருகல்பரே! நான் சொல்லுவதில் தவறு உண்டா?


பாசு:

நீர் சொல்லுவது சாஸ்திர சம்மதமானது.


பௌ. பிக்கு:

பாத்திரத்தின் நிறத்தை மாற்றிவிட்டேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள். அதன் உருவத்தையும் அளவையும் எப்படி மாற்ற முடியும்?


காபாலி:

நீங்கள் மாயாபுத்திரர்கள்*20 அல்லவா?


பௌ. பிக்கு:

உம்மோடு எவ்வளவு நேரந்தான் வாதாடுவது? இதை நீர்தான் எடுத்துக்கொள்ளும், ஐயா!


காபாலி:
புத்தருடைய தானபாரமிதைக்கு*21 இது ஒப்பானது.


பௌ. பிக்கு:

இந்த நிலையில் எனக்கு உதவி செய்வோர் யார்?


காபாலி:
ஏன்? புத்த, தர்ம, சங்கத்தான்.


பாசு:

இந்த வழக்கை என்னால் தீர்க்க முடியாது. நியாய மன்றம்போய் தீர்த்துக்கொள்ளுவது நல்லது.


தேவ:

அப்படியானால், கபாலபாத்திரத்திற்கு ஒரு கும்பிடு.


பாசு:

ஏன் அப்படிச் சொல்லுகிறாய்?


தேவ:

பல விகாரைகளிலும் இருந்து கிடைக்கிற காணிக்கைப் பணத்தை இந்த பிக்கு தன்னுடைய இராஜவிகாரையில் குவித்து வைத்திருக்கிறார். நீதிமன்றத்தில் இருக்கிறவர்களின் வாயில், அந்தப் பணத்தைப் போட்டு அவர்கள் வாயை அடக்கி விடுவார். நானோ ஏழைக்
காபாலிகை. எனக்கு என்ன இருக்கிறது? பாம்புத்தோலும் திருநீறுந்தான் இருக்கிறது. நியாயமன்றம் போக எனக்கு காசு ஏது?

பாசு:

அப்படியல்ல. நியாய மன்றத்தில் இருக்கிறவர்கள் நேர்மையும், திண்மையும், உறுதியும், நுட்ப அறிவும், குடிப்பிறப்பும் உள்ளவர்கள். மாளிகையைத் தூண்கள் தாங்குவதுபோல, நீதியை இவர்கள் தாங்குகிறார்கள்.


காபாலி:

நீங்கள் சொல்லுவது என்ன? யோக்கியனாக உள்ளவன் அஞ்சவேண்டிய காரணமே இல்லை.


பௌ. பிக்கு:
அப்படியானால், நீதிமன்றத்துக்கு நடவுங்கள்.


பாசு:

ஆமாம்! அதுதான் நல்லது.

(எல்லோரும் நடக்கிறார்கள். பயித்தியக்காரன் ஒருவன் வருகிறான்)


பைத்தியக்காரன்:
அதோ, அந்த நாய்! வறுத்த மாமிசம் உள்ள அந்த மண்டையோட்டைத் திருடிக்கொண்டு ஒடுகிறாயா? தேவடியாள் மகனே! நீ எங்கே போகப் பார்க்கிறாய்? மண்டையைப் போட்டுவிட்டு, அது என்னைக் கடித்துத் தின்ன வருகிறது.

(நாற்புறமும் பார்க்கிறான்.)

இந்தக் கல்லினால் அதன்பல்லை உடைக்கிறேன்; பார். மண்டையைப் போட்டுவிட்டு ஓடுகிறாயா, பித்துக் கொள்ளி நாயே! கடல் மானத்திலே குதித்துப் பன்றியின் மேல் ஏறிக் கொண்டு ராவணனை அடித்து இந்திரன் மகனை தூக்கிக் கொண்டு வந்துடுத்து. அடே எருக்கஞ்செடி! நீ என்ன சொல்றே? பொய் இன்னா சொல்றே. இந்த தவளையைப் கேட்டுப்பார். மூணு லோகத்திலும் இணையில்லாத எனக்குக்கூட சாக்ஷி வேணுமா? என்ன செய்கிறேன் பார். அது வைச்சிட்டுப் போன அந்தச் சோத்தைத் தின்னு போடறேன்.

(தின்கிறான். பிறகு அழுகிறான்)

ஓ, ஓ! நான் அழுகிறேன்; அழுதுண்டே சாகிறேன்.

(அழுகிறான். பிறகு நாற்புறமும் பார்க்கிறான்.)

ஏண்டா என்னை அடிக்கிறிங்கோ; போக்கிரிப் பசங்களா! பீமன் மைத்துனன் கடாற்கஜனைப் போல நான் அவனுக்கு அவன் பேர் என்ன? அவன், அவன், அவனுக்கு மச்சினன்தான். ஆயிரம் பேய்கள் என் வயித்திலே
புகுந்து கொண்டு குதிக்கின்றன. கையிலே ஈட்டியை வைச்சிகிட்டுக் குத்துகின்றன. நூறு புலியையும் பாம்பையும் வாயிலிருந்து கக்குகிறேன். என்ன தொந்தரவு செய்கின்றன! பொறுத்துக்கொள் ஐயா, பொறுத்துக்கொள், தப்பை மன்னிச்சுக்கோ. இந்த மாமிசத்தைப் பற்றிக் கவலை வேண்டாம்.

(பார்க் கிறான்.)

அதோ நம்முடைய குரு சூரநந்தி இருக்கிறார்! அங்கே போரேன்

(ஓடுகிறான்.)பாசு:

அதோ, அந்தப் பயித்தியக்காரன் இங்கே வருகிறான். குப்பையில் கிடந்த கிழிந்துபோன கந்தல் சட்டையை அணிந்து கொண்டு, பரட்டைத் தலையுடன் காய்ந்து போன மாலைகளைக் கழுத்தில் அணிந்து கொண்டு கையில் உள்ள இறைச்சிக்காகக் காக்கைகள் சூழ்ந்து பறந்து வர, குப்பைமேடு மனித உருவங் கொண்டு வருவது போல வருகிறான்; பாருங்கள்.


பைத்திய:

(அருகில் வந்து)

ஒரு சண்டாளப் பயலுடைய, மதிப்புள்ள ஒரு நாயினிடமிருந்து இந்த மண்டை யோட்டை வாங்கிக் கொண்டு வந்தேன். பெரிய மனசு பண்ணி இதை வாங்கிக் கொள்ளுங்கோ.


பாசு:

(நோக்கி)

அதற்குத் தகுதியானவர் இடம் அதைக் கொடு..


பைத்திய:

ஓ, பிராமணா! இதை வாங்கிக் கொள்ளும்.


பௌ. பிக்கு:

கௌரவம் உள்ள இந்தப் பாசுபதன் இதற்குத் தகுதியானவர்.


பைத்திய:

(காபாலிகனை அணுகி, மண்டை யோட்டை அவன் முன்பு வைத்து அவனை வலம் வந்து காலில் விழுந்து கும்பிடுகிறான்.)

தெய்வமே! உன்னைக் கும்பிடுகிறேன். வரம் தரவேணும்.


காபாலி:

இதோ நம்முடைய கபால பாத்திரம்!


தேவசோ:
ஆமாம்! அதுதான்! அதுதான்!!

காபாலி:

சிவபெருமான் திருவருளால் நான் மீண்டும் காபாலி ஆனேன்.

(மண்டையோட்டை எடுத்துக் கொள் கிறான்.)பைத்திய:

தேவடியாள் மகனே, விஷத்தைக் குடியேன்.

(மண்டையோட்டைப் பிடுங்கிக் கொண்டு போகிறான்)காபாலி:

(அவனைத் தொடர்ந்து சென்று)

இந்த யமதூதன் என்னுடைய உயிரைக் கொண்டு போகிறான். ஐயா, எனக்கு உதவி செய்யுங்கள்.


பிக்குவும் பாசுபதனும்:

அப்படியே உதவி செய்கிறோம்.

(எல்லோரும் பைத்தியக்காரனை மறித்துக் கொள்ளுகிறார்கள்)காபாலி:

ஏ! நில்லு, நில்லு.


பைத்திய:

என்னை ஏன் வழி மறிக்கிறாங்கோ.


காபாலி:

என்னுடைய கபால பாத்திரத்தைக் கொடுத்து விட்டுப் போ.

பைத்திய:

முட்டாள்! இது தங்கப் பாத்திரம் இன்னு தெரியலையா, உனக்கு?

காபாலி:

இது தங்கப் பாத்திரம் என்றால், இதை யார் செய்தார்கள்?


பைத்திய:

அதைச் சொல்லட்டுமா? பொன் நிறமான போர்வையைப் போர்த்துக்கிட்டு இருக்கானே, அந்தத் தட்டான்; அவன் தான் இதைச் செய்தான். இது பொன் கிண்ணம்.


பௌ. பிக்கு:

என்ன சொல்லுகிறாய்!


பைத்திய:

இது பொன் கிண்ணம்; தங்கக் கிண்ணம்.


பௌ. பிக்கு:

இவன் என்ன, பைத்தியக்காரனா?


பைத்திய:

அடிக்கடி பைத்தியக்காரன், பைத்தியக்காரன் இன்னு சொல்லுறாங்கோ. இதைப் பிடிச்சுக்கோ! அந்தப் பைத்தியக்காரனை எனக்குக் காட்டு.

(காபாலிகனிடம் மண்டையோட்டைக் கொடுக்கிறான்.)காபாலி:

(மண்டையோட்டை வாங்கிக் கொண்டு)

அதோ! அந்தச் சுவற்றிற்குப் பின்னால் அவன் இருக்கிறான். சீக்கிரமாக ஓடிப்போய் அவனைப் பிடித்துக் கொள்.


பைத்திய:

அப்படியே ஆகட்டும்

(ஓடுகிறான்)பௌ. பிக்கு:

வாதி வெற்றி பெற்றதற்காக மகிழ்ச்சியடைகிறேன்.


காபாலி:

(மண்டையோட்டை மார்பில் அணைத்துக்கொண்டு)

இது வரையில் மகேஸ்வரனைப் பின்பற்றி விரதம் தவறாமல் நடந்து வந்தேன். என் அருமைக் கபால பாத்திரமே! உன்னைப் பிரிந்தபோது மகேஸ்வரனும் என்னை விட்டுப் பிரிந்து விட்டான். உன்னை மறுபடியும் பெற்றபோது, மீண்டும் மகேஸ்வரன் எனக்குக் காட்சியளிக்கிறான்!


தேவசோ:

ஐயா! உம்மைப் பார்த்தால் பிறைச்சந்திரனோடு கூடிய இரவு*

22 போலக் காணப்படுகிறீர். இது எனக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.


பாசு:

ஐயா, தங்கள் கபால பாத்திரத்தைத் தாங்கள் மீண்டும் பெற்றுக் கொண்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன்.


காபாலி:

நான் அடைந்துள்ள சந்தோஷம் தங்களைச் சேர்ந்தது.


பாசு:

(தனக்குள்)

குற்றமற்றவனுக்கு அச்சமில்லை என்பது சரிதான். இந்தப் பௌத்த பிக்கு இன்று தப்பித்துக் கொண்டான்.

(வெளிப்படையாக)

என்னுடைய நண்ப ருடைய மகிழ்ச்சியைக் கண்டு நானும் மகிழ்ச்சி யடைகிறேன். தூமவேளை ஆகிவிட்டது. கிழக்குப் பக்கமுள்ள எம்பெருமானிடம்23 செல்லவேண்டும். சச்சரவு கொண்டிருந்த உங்கள் இருவருக்கும் கிராதார் ஜுனர் போல

(சிவனும் அர்ச்சுனனும் போல)

நட்பும் அன்பும் உண்டாகட்டும்.

(பாசுபதன் போகிறான்).காபாலி:

நாகசேனரே! ஏதேனும் பிழை செய்திருந்தால் மன்னித்தருளும்.


பௌ. பிக்கு:

அப்படி ஒன்றும் இல்லை. உம்மை நான் எப்படிச் சந்தோஷப் படுத்துவேன்.


காபாலி:

தாங்கள் என்னை மன்னித்தால், அதுவே சந்தோஷம்.


பௌ. பிக்கு:

நான் போய் வருகிறேன்.


காபாலி:

வணக்கம். போய்வாரும். மீண்டும் சந்திப்போமாக.


பௌ. பிக்கு:

அப்படியே.


காபாலி:

தேவசோமா, கண்ணே! போகலாம் வா!

(போகிறார்கள்.)


பரதவாக்கியம்

உலகத்தின் நன்மைக்காக ஓமத்தீ வளர்வதாக பசுக்கள் பாலை நிறைய சொறிவதாக, விப்பிரர் வேதம் ஓதுவாராக, ஞாயிறும் திங்களும் உள்ள வகையில் உலகம், தீயவை நீங்கி நன்மை பெற்று வாழ்வதாக, பகைவர்களை வென்ற வீரத் தோள்களையுடைய சத்துருமல்லன்*24 ஆட்சியின் கீழ் இன்பமும் அமைதியும் என்றும் தங்குவதாக.

முற்றிற்று.

அடிக்குறிப்புகள்

1. உலகமாகிய பாத்திரத்தில் நிறையக்கடவது என்னும் பொருள் உள்ள வியாப்தாவனி பாஜனம் என்று மூலநூலில் கூறப்பட்டுள்ளது. இதில், இந்நாடக நூலாசிரியராகிய மகேந்திர விக்ரமவர்மருடைய சிறப்புப் பெயர்களில் ஒன்றான அவனிபாஜனன் என்பது ஒலிக்கும்படி இச்சொல் அமைக்கப்பட்டுள்ளது.

2. இதில், இந்நாடக நூலாசிரியரான மகேந்திரவிக்ரமவர்மரு­டைய சிறப்புப் பெயர்களான மத்தவிலாசன், குணபரன் என்னும் பெயர்கள் அமைந்துள்ளன. யௌவன குணபர மத்தவிலாசப் பிரஹசனம் என்பதற்கு, காளைப் பருவத்திற்கு இயல்பாக உள்ள களியாட்டம் பொருந்திய நகைச்சுவை நாடகம் என்பது பொருள்.

3. பரம விரதம் என்பது இங்கே காபாலிக விரதத்தைக் குறிக்கிறது.

4. குடி மயக்கத்தால், தேவ சோமை என்பதற்குப் பதிலாக, சோமதேவி என்று வேறொருத்த பெயரைக் கூறுகிறான். அதனால், தேவசோமை கோபிக்கிறாள்.

5. வாருணி என்பது, மயக்கந்தரும் மதுபானங்களுக்கும், வருண தேவனுடைய மகளுக்கும் பெயர்.

6. வாருணிதேவிகள், மதுபானம்.

7. காபாலிகர், பிச்சையைக் கபால பாத்திரத்தில் (மண்டை ஓட்டில்) பெறவேண்டும் என்பது மரபு. கபாலம் காணாமற்போய் விட்டபடியால், தேவசோமை கவலைப்படுகிறாள்.

8. காபாலிகன் தர்க்க சாஸ்திரத்தைத் தனக்குத் துணைகொண்டு சமாதானம் அடைகிறான்.

9. மண்டை என்பது மண்டை ஓடு அல்ல. மரம் அல்லது மண்ணால் செய்யப்பட்ட பாத்திரம். இதற்கு மண்டை என்று பெயர். பௌத்த பிக்ஷுக்கள் இப்பாத்திரத்தில் பிச்சை பெற வேண்டும் என்பது மரபு.

10. இராசவிகாரை என்பது காஞ்சிபுரத்தில் இருந்த செல்வமிக்க பௌத்த மடம்.

11. ஏகம்பம் என்பது, காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பர ஈசுவரர் கோவில். இங்கே, பண்டைக்காலத்தில் காபாலிகர் இருந்தனர் என்பது புராணங்களினாலும் தெரியவருகிறது.

12. சம்விரதிசத்தியம், பரமார்த்தசத்தியம் என்பன, பௌத்தரில் ஒரு சாராருடைய தத்துவசாத்திரத்தில் கூறப்படுவன. காபாலிகன் இந்தச் சொற்களைக் கூறி பௌத்த பிக்குவைக் கேலி செய்கிறான்.

13. கரவடன் என்பவர் களவு நூலை எழுதியவர் என்று கூறப்படுகிறார். இவர் உண்மையில் இருந்தவர் அல்லர் என்றும் கற்பனைப் பெயர் என்றும், அறிஞர்கள் கருதுகிறார்கள். வேதாந்தம் என்பது உபநிஷத்துக்கள்.

உபநிஷத்தில் உள்ள கருத்துக்கள் சில புத்தருடைய உபதேசத்திலும் உள்ளன. காபாலிகன் கூறுவதுபோல மகாபாரதத்திலிருந்து புத்தர் எதையும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

14. வீதராகன் என்பதுஆசையற்றவன் என்று பொருள்படும். புத்தருக்கு வீதராகன் என்ற பெயரும் உண்டு.

15. பழைய தேரவாதப் பௌத்த மதத்தில், கணபங்கம் கூறப்படுகிறதே யன்றி மாயாவதம் கூறப்படவில்லை. ஆனால், மகாயான பௌத்த மதத்திலே மாயாவாதம் கூறப்படுகிறது. ஏகான்ம வாதியான சங்கராச்சாரியார், மகாயான பௌத்த மதத்திலிருந்து மாயாவாதத்தை எடுத்துக் கொண்டார் என்பர்.

16. பாணிக்கிரகணம் செய்கிறான் என்பதற்குக் கையைப் பிடிக்கிறான் என்றும், மனைவியாக்கிக் கொள்கிறான் என்றும் இரண்டு பொருள் உள்ளன.

17. அனித்தியம், துக்கம், அனாத்மம் என்னும் பௌத்த மதக் கொள்கையை ஈண்டு நூலாசிரியர் பிக்குவின் வாயிலாக ஏளனம் செய்கிறார்.

18. பௌத்த தர்மத்தைச் சணம் அடைகிறேன் என்பது இதன் பொருள்.

19. காஷாயம் என்பது துவர் (காவி) ஆடைக்கும், மனக் குற்றத்திற்கும் பெயர். இந்தச் சொல்லை இவ்விருபொருளிலும் சிலேடையாக வழங்கிறான் காபாலிகன்.

20. மாயை யுடையவர்கள், அதாவது உலகம் மாயை என்னும் கொள்கை யுடையவர்கள் என்பது பொருள். அன்றியும் புத்தருடைய தாயார் பெயர் மாயாதேவி என்பது இவ்விருபொருளிலும் இச்சொல்லைக் காபாலிகன் வழங்குகிறான்.

21. தானபாரமிதை என்பது, போதி சத்துவர் புத்தராகப் பிறப்பதற்கு முன்பு செய்த பத்துப் பாரமிதைகளில் ஒன்று. பிக்கு, காபாலிகன் தொந்தரவு பொறுக்க முடியாமல் தன்பாத்திரத்தைக் கொடுத்துவிட, அதை, புத்தர் முன் பிறப்பில் செய்த தானபார மிதைக்கு ஒப்பிட்டுக் கேலிசெய்கிறான் காபாலிகன்.

22. கருநிறமுள்ள காபாலிகன் மார்பில், வெண்ணிறமுள்ள மண்டை ஓடு பொருந்தியிருப்பதை உபமானப்படுத்திக் கூறுகிறாள்.

23. காஞ்சிபுரத்தில் ஏகாம்பர ஈசுவரர் கோவிலுக்குக் கிழக்கில் இருந்த சுடுகாடு. இப்போதும், ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்கு எதிரில், கிழக்குப்புறமாக திருக்கச்சி மாயானம் என்னும் கோயில் இருக்கிறது.அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில்.

“சவந்தாங்கும் மயானத்துச் சாம்பல் எலும்புத்
தலையோடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னை
பவந்தாங்கும் பாசுபத வேடத்தானை பண்டமார்
கொண்டுகந்த வேள்வி எல்லாம்
கவர்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னை….”

என்று இவ்விரு கோயில்களையும் குறித்திருக்கிறார். இந்நாடகத்தில் வரும் பாசுபதன் இங்கு இருந்தவனாதல் வேண்டும்.

24. சத்துருமல்லன் என்பது இந்நூலாசிரியன் சிறப்புப் பெயர்களுள் ஒன்று

image


Source: Thamizh Virtual University
Tanq: Dhanasekaran Prabhakaran Anna