பண்டைய தேர்தல் முறை குடவோலை பகுதி 1




image

குழுமத்தை நெறிப்படுத்தி நன்முறையில் வாழ்க்கைத்தரத்தினை அமைத்திட தலைமைத்துவம் என்னும் தனித்துவப் பண்பு தலையானதாகி விடுகிறது.சமூக அதிகாரப் பீடத்தின் உச்சியிலிருக்கும் தலைவன் ஒருவனின் நிர்வாக முறைகள் சமூக வலையமைப்பு திறம்பட செயல்பட காரணியாகிறது.இதை உலக நாடுகள் பலவற்றிலும் காணலாம்.இது சரிவர அமையாததால் ஏற்பட்ட வீழ்சசிகளையும் கேள்வியுற்றிருக்கலாம்.

இவற்றையெல்லாஞ் செய்திட தகுதியான ஒருவனை நியமிப்பது அல்லது தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது.இந்தச் செயல்முறை தொன்றுதொட்டே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது.நாடாள்பவர் தங்களின் நிர்வாக உதவிக்காக அதிகாரிகளை நியமிக்கும் வழக்கம் தொடங்கி இன்றைய தேர்தல் முறை வரை பல்வேறு மாற்றங்களை கண்டுவிட்டது.

காலக்கோட்டை எடுத்துக்கொண்டோமென்றால் நியமன முறை பின்பற்றப்பட்டு வந்தாலும் ‘மக்களாட்சி’ எனும் பதம் கிராமங்களில் கூட பிரபலமாகிவிட்ட இந்த காலத்தில் பயனளிப்பதாக, நம்பகத்தன்மை வாய்ந்ததாக இராது.எனவே தங்களுக்கான தலைவர்களை(தலைவன் என நினைத்து) தாங்களே தேடிக்கொள்கின்றனர்.

இந்த ஜனநாயக முறை இன்று உலகளாவில் இருந்து வந்தாலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இதே மக்களாட்சி முறை தமிழகத்தில் இருந்து வந்துள்ளது, குடவோலை முறை என்ற பெயரில்.

image

சங்ககாலத்தில் குடவோலை முறை இருந்ததைக் குறிப்பிடும் அகநானூற்றுப் பாடல்

அகநானூறு 77
மருதன் இளநாகனார்

நன்னுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர்
துன்னருங் கானந் துன்னுதல் நன்றெனப்
பின்னின்று சூழ்ந்தனை யாயினன் றின்னாச்
சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்துற
இடியுமிள் வானம் நீங்கி யாங்கனும்

குடிதிப் பெயர்ந்த சுட்டுடை முதுபாழக்
கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறிகண் டழிக்கும் ஆவண மாக்களின்
உயிர்திறம் பெயர நல்லமர்க் கடந்த
தறுக ணாளர் குடர்த்தரீஇத் தெறுவரச்
செஞ்செவி எருவை யஞ்சுவர இகுக்குங்
கல்லதர்க் கவலை போகின் கீறூர்ப்
புல்லரை யித்திப் புகழ்படு நீழ
எல்வளி யலைக்கும் இருள்கூர் மாலை

வானவன் மறவன் வணங்குவிற் றடக்கை
ஆனா நறவின் வண்மகிழ்ப் பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ்சமத் துயர்த்த
திருந்திலை யெஃகம் போல அருந்துயர்
தருமிவள் பனிபார் கண்ணே

பொருள்:

தலைவி வருந்திட, ஆள்வினையின் காரணமாக பொருளீட்ட மிக்க துன்பம் தரும் காட்டுப்பாதையில் செல்லும்படி மனம் செலுத்துகிறது.

இடியும் மழையும் வானம் வழங்காததால் வறண்டு போன நிலத்திலுள்ள மக்களெல்லாம் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.

அங்கு கயிற்றால் கட்டப்பெற்றிருக்கும் பானையில் தகுதியான தலைவனை தேர்ந்தெடுக்கும் பொருட்டு ஒவ்வொன்றாக எடுக்கப்படும் ஓலையினைப் போன்று  சிவந்த செவியுடைய பருந்துகள் இறந்து போன வீரர்களின் சடலங்களிலிருந்து குடல்களைப் பிடுங்கித் தின்னும்.

அத்தகைய பாதையில் அமையப்பெற்ற இத்தி மர நிழல் புள்ளிகளாகக் காணப்படும்.அங்கு வீசும் காற்று கூட மிக்க வெம்மையாக காணப்படும்.

வானவனின்(சேரன்) படைத்தலைவனும் வணங்குவதற்குரிய வலிமையான வில்லுடையவன் பிட்டன்.அவனது இலை போன்ற கூர் முனையுடைய வேல்கள் பகைவரின் உடல்களை வருத்தும் .அதைப்போன்று இவளது கண்ணீர் பொருந்திய விழிகள் என்னை வருத்துகின்றன.

அந்த காலத்தில் வழக்கத்திலிருந்த தேர்தல் முறையான குழிசி ஓலை(குடவோலை) முறை உண்ணும் கழுகின் தோற்றத்திற்கு உவமையாக கூறப்பட்டுள்ளது.இதன் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளதை உணரலாம்.

இலக்கியங்களில் உவமை என்ற ஒன்று மட்டும் இல்லாது போயிருக்குமானால் பல தகவல்களை நாம் இழந்திருக்க நேரிட்டிருக்கும்.

வேட்பாளருக்கான தகுதிகள் மற்றும் தேர்தல் நடத்தும் முறை பற்றி கூறும் உத்திர மேரூர் குடவோலை கல்வெட்டுகள் பற்றி வேறொரு பதிவில் காணலாம்

#பொன்