தளவானூர் சத்ருமல்லேசுவரம்

செஞ்சி அருகேயுள்ள ஊரின் தளவானூர் எனும் ஊரின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது இக்குடைவரை. முதல் மகேந்திரவர்மனது காலத்தையதாகக் கருதப்படும் இக்குடைவரை அவனது பிற்காலத்தில் எழுப்பப்பட்ட ஒன்றாகும்.

வயல்வெளிகளைத் தாண்டி வரப்புகளில் நடந்து சென்று குடைவரையை அடையலாம். சிவனுக்காக எழுப்பபட்ட இக்குடைவரையின் கருவறையில் இலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பிற குடைவரைகளைப் போல் அல்லாது கருவறைக்கு முன் சிறிய முன்றிலொன்று அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி கீழ் குடைவரையும் இத்தகைய அமைப்பிலானதால் அது தளவானூர் குடைவரையோடு ஒப்பிடப்பட்டு பல்லவர் குடைவரையென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மண்டகப்பட்டு போல் அல்லாது இக்குடைவரையின் தூண்களில் வேலைப்பாடுகள் உள்ளன. பாறையிலே அதிட்டானமும் குமுதமும் அமைக்கப்பட்டுள்ளதை இங்கு தான் காண்கிறேன். துவாரக பாலகர்கள் தவிர்த்து வேறு பெரிய அளவிலான சிற்பங்கள் ஏதுமில்லை.

அழகான மகர தோரணமொன்றும் முக நாசிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு வெளிப்புறத்திலே பலகையொன்றில் துர்க்கையும் பிற்காலத்தைய உடைந்த நந்தியும் காணப்படுகின்றன.

இக்குடைவரையில் பல்லவர் காலத்தைய கல்வெட்டுகள் மூன்றும் பிற்காலத்தைய கல்வெட்டொன்றும் காணப்படகிறது.

பிற்காலக் கல்வெட்டு

பஞ்சவநனியிசுரன் பெரிய நாச்சியம்மை எனும் இரு பெயர்களைக் குறிப்பிடுகிறது.

குடவரையின் வெளிப்புறத் தூணொன்றில் பல்லவ கிரந்த கல்வெட்டொன்று உள்ளது. நரேந்திரன் என்பான் சத்ரு மல்லேசுவரம் எனும் பெயரில் குடைவரை நிர்ணயித்ததைக் குறிப்படுகிறது. இந்த நரேந்திரன் யார என்பதில் குழப்பமே நீடித்து வருகிறது. பல்லவ வரிசையில் நரேந்திரன் எனும் பெயருடைய அரசன் இருந்ததாகத் தெரியவில்லை. மேலும் மகேந்திரன் நரேந்திரன் எனும் பெயர் பெற்றிருந்ததாகவும் தெரியவில்லை. நரேந்திரன் என்பான் மகேந்திரனுக்கு அடங்கிய சிற்றரசனாயிருக்கலாம். அவன் மகேந்திரன் பெயரால் குடைவரை அமைத்திருக்கலாம்( வல்லம் குடைவரை போன்று )

பல்லவ கிரந்த கல்வெட்டு

” தண்டோநத நரேந்த்ரநோ

நரேந்த்ரநை ஸகரிதம்

ஸத்ரு மல்லேந ஸைலேஸ்மிந்

ஸத்ரு மல்லேஸ்வராலயம்”

இதே காலக்கட்டத்தைச் சேர்ந்த தமிழ் கல்வெடடொன்றும் முன்றில் தூணொன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. செல்லன் சிவதாசன் எனபான் சொன்னதாக இக்கல்வெட்டு முடிகிறது. கிரந்தக் கல்வெட்டு கூறும் அதே தகவலைத் தான் இதுவும் கூறுகிறது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் வெண்பெட்டு ஊரினைக் குறிப்பிடுவதாக இருக்கலாம்.

தமிழ் கல்வெட்டு

” ஶ்ரீ தொண்டையந்தார்

வேந்தன் நரேந்திரப்

போத்தரைசன் வெ

ண்பெட்டின் பா

ல் மிகமகிழ்ந்து க

ண்டான் சரமிக்க வெ

ஞ்சிலையின் ஶ

த்துரு மல்லேஶ்வ

ராலையமென்றர

ணுக்கிடமாக ணங்கு

இவ்வூரழும்

ம மங்கலவன்

செல்லன் சிவ தா

ஸந் சொல்லியது”

வெளிப்புறத் தூணொன்றில் மூன்றாம் நந்திவர்மப் பல்லவனதாகக் கருதப்படும் நந்திவர்மனின் பதினைநதாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று காணப்படுகிறது(Ref vol 12 ). இக்கல்வெட்டு தானம் அளித்தவரை வெண்பெட்டு தளி உடையை….. எனக் குறிப்பிடுகிறது. சிறிது சிதைந்துள்ளது. தொல்லியல் துறை அதன் மேலேயே தடுப்பு வேலிகளை அமைத்துள்ளது.

“ஸ்வஸ்தி ஶ்ரீ கோவிசைய

நந்தி விக்கிரமப்

பரு(மக்கு) யாண்டு பதி

னைந்தாவது வெண்

பெட்டு வாழும் தளி உடை(ய)

……

மொடன்னிடைக் க

ழஞ்சுப் பொன் முத

ல் கொண்டு இப்பொ”

இக்குடைவரைக்கு மேல் உள்ள பாறையில் சமணத் துறவியர் வாழ்ந்த படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலே செல்வதற்கான படிகளும் உள்ளன. குடவரை இந்திய தொல்லியல் துறையினால் பாதுகாக்கப் படுகிறது.